ஆண்பிள்ளை ரூ.50,000; பெண் குழந்தை ரூ.25,000 - வியாபாரம் செய்த பெண்

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் வேலூர் போலிசிடம் சிக்கியுள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த மகேஸ்வரி, 45, என்னும் அந்தப் பெண் கடந்த பத்து ஆண்டுகளாகக் குழந்தைகளைக் கடத்தி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். இது வரை 165 குழந்தைகளை பக்கத்து மாநிலங் களுக்குக் கடத்திச் சென்றுள்ள அந்தப் பெண் ஆண் குழந்தைகளுக்கு ரூ.50,000 என்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 என்றும் விலை வைத்து விற்றுவந்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறை வாக இருக்கும் என்பதால் அவற்றைக் குறி வைத்து பிரசவிப்பது யார் யார் என்று நோட்டமிட்டு குழந்தைகளைக் கடத்துவதில் கைதேர்ந்தவராக மகேஷ்வரி வலம் வந்துள்ளார். வேலூரை அடுத்த அடுக்கும் பாறை என்னும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கல்பனா என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பெற்றிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவர் கழிவறைக்குச் சென்று திரும்பியபோது குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியில் கல்பனா அலறிய சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மருத்துவமனை முழுவதும் அவர்கள் குழந்தையைத் தேடினர்.

அப்போது தலையில் முக்காடிட்டு கையில் குழந்தையுடன் சென்ற மகேஷ்வரியை மடக்கினர். கத்தியைக் காட்டி அவர்கள் அத்தனை பேரையும் மிரட்டிய மகேஷ்வரி ஒருவழியாகப் பிடிபட்டார். குழந்தையை மீட்ட பொது மக்கள் மகேஷ்வரியை போலிஸ் வசம் ஒப்படைத்தனர். ஏற்கெனவே குழந்தை கடத்தல் குற்றத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண் பிணையில் வெளிவந்து மறுபடியும் குழந்தையைக் கடத்தி பிடிபட்டுள்ளார்.