வறண்டு போன வைகை: 5 மாவட்டங்கள் தவிப்பு

மதுரை: வைகை ஆறு முற்றிலுமாக வறண்டு போனதால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக 5 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய் வது பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் நீர்வள நிபுணர்கள். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது வைகை ஆறு. இம்மாவட்டங்களில் மட்டும் ஏறத் தாழ 287 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது இந்த ஆறு. தென் மாவட்டங்களில் விவசா யம், குடிநீர், இதர பயன்பாடுகள் என அனைத்துக்கும் வைகை ஆற்றையே மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் இந்தாண்டு வைகை முற்றிலுமாக வறண்டுள்ளது. கிட்டத்தட்ட பாலைவனம் போலவே காட்சியளிக்கிறது. வருஷநாடு வனப்பகுதியில் மூலவைகையில் அஞ்சரைப்பள்ளிக் கும் காந்தி கிராமத்திற்கும் இடைப் பட்ட பகுதியில் வெள்ளிமலை ஆறும் உடங்கலாறும் இணை கின்ற கூட்டாற்றில் இருந்து வைகை பெரும் நதியாக உருவெடுக்கிறது.

வழக்கமாக தென்மேற்குப் பருவ மழையை விட வடகிழக்குப் பருவ மழையால் தான் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வைகையின் நீர்பிடிப்பு பகுதிகள் மட்டுமல்லாது பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் சரியாகப் பெய்யவில்லை. “இதனால் வைகை நதி செல்லும் பாதை முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. குறைந்த பட்சம் வெள்ளிமலை ஆற்றில் பெருக்கெடுக்கும் ஊற்றுத் தண் ணீரேனும் வாலிப்பாறை வரை வந்து சேரும். தற்போது ஊற்றுத் தண்ணீர் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. “வருஷநாடு, மேகமலை வனப் பகுதியில் உள்ள வைகையின் சிற்றோடைகளில் ஊற்று இல்லாத தால் வன உயிரினங்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகி யுள்ளன. இதனால் அவை இந்த பகுதியில் இருந்து இடம்பெயரத் துவங்கியுள்ளன,” என்று புலம்பு கிறார்கள் தென்மாவட்ட விவசாயிகள். வைகையின் முழுக்கொள்ளளவு 71 அடி. ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம், 25.56 அடியாகக் குறைந்துள்ளது. இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே வைகை அணையில் உள்ள தண் ணீர் கைகொடுக்கும் எனக் கூறப் படுகிறது.

குடிநீருக்காக அணையில் இருந்து 115 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மிக விரைவில் இந்த அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. “அவ்வாறு குறைக்கும் பட்சத் தில் வைகையை நம்பியுள்ள 5 மாவட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாவார்கள். “குடிநீர் குறித்து அரசு தனிக்கவனம் செலுத்தாவிட்டால் 5 மாவட்டங்களிலும் இன்னும் சில நாட்களில் தண்ணீருக்கு பெரும் திண்டாட்டம் ஏற்படுவதை தடுக்க முடியாது,” என்கிறார்கள் நீர்வள நிபுணர்கள். இதற்கிடையே குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டால், அது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பாதிக்குமோ என ஆளும் அதிமுக தரப்பு வேட்பாளர்கள் பலரும் கவலையில் மூழக்கியுள்ளனர்.

Loading...
Load next