இந்தியாவினுள் ஊடுருவக் காத்திருக்கும் 100 பயங்கரவாதிகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் அதிரடியாகப் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா=பாகிஸ்தான் இடையிலான பதற்றநிலை உச்சத் தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து மறுஆய்வு செய்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு நேற்று கூடி விவாதித்தது. இந்தக் கூட்டத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமரிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்படுவது பற்றி யும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றியும் அவ்வறிக்கையில் சில முக்கிய தகவல்கள் இடம்பெற்று இருந்ததாக அறியப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் நூறு பயங்கரவாதிகள் குறைந்தது 12 தளங்களில் முகாமிட்டு, இந்தி யாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக திரு தோவால் அமைச் சரவைக் குழுவிடம் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், ஒவ்வொரு முகாமிற் கும் சுமார் 40=50 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காவல் காத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பனிக்காலம் தொடங்கிவிட்டால் பாதைகள் மூடிவிடும் என்பதால் அதற்குமுன் அதிக அளவில் பயங்கரவாதிகளை இந்தியாவிற் குள் ஊடுருவச் செய்து, பாது காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயலலாம் என்று இந்திய உளவு அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன.