சசிகலா புஷ்பாவிடம் மதுரை காவல்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிடம் மதுரை காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது அவரிடம் 150 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் போலி வக்காலத்துத் தாக்கல் செய்த வழக்கு தொடர் பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் பணிப்பெண்களாகப் பணியாற்றிய 2 இளம்பெண்கள் அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். மேலும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ஆகியோரும் தங்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடியில் உள்ள புதுக் கோட்டை காவல் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் சசிகலா புஷ்பா, கணவர், மகன் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்த வழக்கில் முன்பிணை கோரி, சசிகலா புஷ்பா சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான விசாரணையின் போது அவர் வெளிநாட்டில் இருந்தார். இந்நிலையில் வழக்கு தொடர் பான வக்காலத்தில் அவரால் எப்படிக் கையெழுத்திட முடிந்தது எனும் கேள்வி எழுந்தது.

மதுரை காவல்துறையின் விசாரணைக்காக கோ.புதூர் காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையான சசிகலா புஷ்பாவிடம் 150 கேள்விகள் கேட்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம்