எம்.எல்.ஏ. சீட்டுகளை விற்பதாக மாயாவதி மீது கட்சியினர் புகார்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள் ளது. இந்நிலையில் அங்குள்ள முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர் துருராம் லோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்லால் காப்ரி ஆகியோர் வெளியேறி உள்ளனர். அந்தத் தலைவர்கள் இருவரும் நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அப்போது அவர்கள் மாயாவதியைப் பற்றி பல்வேறு புகார்களைக் கூறினார்கள். “அம்பேத்கார், கன்சிராம் கொள்கையில் இருந்து மாயாவதி எப்போதோ விலகிவிட்டார். “மாயாவதி இப்போது பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

“இப்போது கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான இடங்களை விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். அவர் சார்ந்த சமூகத்தைத் தவிர, மற்ற அனைத்து இடங்களும் விற்கப்படுகின்றன. எனவே, அந்தக் கட்சியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கட்சியில் இருந்து விலகி உள்ளோம்,” என்று அவர்கள் கூறினர். ஏற்கெனவே பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரான சுவாமி பிரசாத் மௌரியா இந்தக் கட்சியில் இருந்து விலகினார். அவரும் மாயாவதி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். மாயாவதி பணம் வாங்கிக் கொண்டு இடம் கொடுப்பதாக சமாஜ்வாடி கட்சியும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.