வீடு புகுந்து திருடிய போலிஸ் அதிகாரி

திருட்டு நடந்தால் போலிசைக் கூப்பிடுவது வழக்கம். ஆனால், போலிஸ் அதிகாரியே வீடு புகுந்து திருடிய சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. புறநகர்ப் பகுதியான அல்மாஸ்குடா என்னும் இடத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் தமது சொந்த ஊரான கரீம்நகருக்குச் சென்றுவிட்டு கடந்த வியாழக்கிழமை இரவு வீடு திரும்பி னார். அப்போது வீட்டின் ஒரு சன்னலில் இருந்த கம்பிகளைக் காணவில்லை. அதிர்ச்சியோடு வீட்டைத் திறந்து உள்ளே சென்றவர் மேலும் அதிர்ந்துபோனார். வீடு முழுக்க பொருட்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன. வீட்டின் ஒவ்வோர் அறையும் அலங்கோலமாகக் காட்சியளித்தன. என்ன நடந்தது என்பதை அறிய பக்கத்து வீட்டுக்காரர் களை அணுகினார் சிவபிரசாத். மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்ததைத் தாங்கள் பார்த்ததாகவும் குளியல் அறையில் சத்தம் கேட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து குளியலறைக் கதவைத் திறந்த போது உள்ளே ஓர் ஆடவர் ஒளிந்திருந்தார். திருடனாக இருப்பார் என்ற சந்தேகத்தில் அவரைப் பிடித்து விசாரித்தபோது தாம் ஒரு போலிஸ்காரர் என்றும் வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்து வீட்டு உரிமையாள ரிடம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார். அதற்குள் அக்கம்பக்கத்தினரும் திரண்டுவிட்டனர். அந்த ஆடவரின் பதில் சந்தேகத்தைக் கிளப்ப மீர்பேட் போலிஸ் நிலையத்துக்கு சிவபிரசாத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலிசார் அந்த ஆசாமியைப் பிடித்து விசாரித்தபோது அவர் பெயர் மகேந்தர் ரெட்டி என்பதும் போலிஸ் ஆணையாளரின் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் அவர் என்பதும் தெரிய வந்தது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து திருட வந்தது உறுதியானதும் அவர் கைது செய்யப்பட்டார். திருட்டு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மகேந்தர் ரெட்டி விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலிஸ் அதிகாரியே திருடனாக மாறியது போலிஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.