நண்பனுக்காக பெண்ணாக மாறிய ஆண் ஏமாற்றத்தால் வழக்குப் பதிவு

திருப்பதி: ஆந்திராவில் நண்பனுக்காக ஆண் ஒருவர் பெண்ணாக மாறி உள்ளார். நண்பர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம், ஓங்கோலைச் சேர்ந்த துர்காராவ் ‘பிளஸ் 2’ படித்தபோது ராகேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட் டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். துர்காராவ் நண்பன் ராகே‌ஷிற்காக அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். ஆனால், அவரை திருமணம் செய்ய மறுத்த ராகேஷ் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

அதற்காக துர்காராவுக்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி ராகேஷ் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் பத்திர காலக்கெடு முடிந்தும் பணம் வழங்காமல் ராகேஷ் தலைமறைவாக உள்ளார். அதனால் துர்காராவ், ராகேஷ் தந்தை பணிபுரியும் வங்கிக்குச் சென்று தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து துர்காராவ் மீது ராகே‌ஷின் தந்தை பெனுமலுரு போலிசில் புகார் அளித்தார். துர்காராவும் காவல்துறையினரை அணுகினார். எனவே, இருவர் மீதும் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.