வாக்களிக்கப் பணம் பெறுவது தேசத்துரோகம்: சீமான்

மதுரை: தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், மக்களிடம் நன்மதிப்பை பெறாத அதிமுகவும் திமுகவும் வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிப்பதாகச் சாடினார். “நமது வாக்குகள் விற்பனை செய்யும் பொருள் கிடையாது. மக்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். தேர்தலின்போது சரியான முடிவை எடுக்கவேண்டும்.

“காவிரி நதி நீர் பிரச்சினையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. “அந்தக் கட்சிகளுக்கு கொள்கை, தத்துவம் என எதுவும் கிடையாது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது குரல் கொடுக்காத இக்கட்சிகள், தற்போது தேர்தலின்போது வாக்குகளைப் பெறத் தேடி வருகின்றன,” என்றார் சீமான். தமிழகத்தில் அதிமுக மீது குற்றம்சாட்டும் பாஜக புதுவையில் மட்டும் கூட்டணி அமைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதை தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.