சீறிப் பாய்ந்த கடல் அலைகள்: பீதியடைந்த சுற்றுலா பயணிகள்

குமரி: திடீரென ராட்சத அலைகள் எழுந்ததால் கன்னியா குமரி கடற்பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பீதி நிலவியது. கடந்த சில நாட்களாகவே இக்கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இங்குள்ள சின்ன குருசடி பகுதியில் கடலில் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. காலை தொடங்கி மாலை வரை கடல் சீற்றத்துடனேயே காணப்பட்டது. இதனால் கடலில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் பயத்தில் அலைகளை விட்டு விலகிச் சென்றனர். இச்சமயம் அங்கு வந்த போலிசார் கடலில் குளிக்க வேண்டாமென சுற்றுலா பயணிகளை எச்சரித்தனர்.