உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறைத்தண்டனை

அடுத்த மாதம் பதவியில் இருந்து ஓய்வுபெற இருந்த நிலையில், சர்ச்சைக்கு உள்ளான கோல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதி கர்ணனை (படம்) ஆறு மாதம் சிறையில் அடைக்குமாறு இந்திய உச்ச நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் இப்படி உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை. மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்துவிட்டார் எனக் கூறி திரு கர்ணனுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. அவரது தண்டனைக்காலம் உடனடியாக தொடங்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், அவரது உத்தரவுகளை வெளியிட ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டாண்டு காலம் நீதிபதியாகப் பணியாற்றிய திரு கர்ணன், கடந்த ஆண்டு கோல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்குத் தானாகவே தடை உத்தரவு பிறப்பித்த இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபடுவதாகக் கூறி பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகார் கடிதமும் அனுப்பினார்.