பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா =அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் உறுதி பூண்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி வா‌ஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகத் தொடர்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய வற்றை அதிகரிப்பது குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

அதன்பின் அவ்விருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ‘இந்தியா வும் அமெரிக்காவும் உண்மையான நண்பர்கள்’ என்று கூறிய டிரம்ப், தானும் மோடியும் சமூக ஊடகங் களில் கோலோச்சும் தலைவர்கள் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், பாகிஸ்தானுக்கும் அவ்விரு தலைவர்களும் எச்சரிக்கை விடுத்தனர். மற்ற நாடுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்க தன் நாட்டை ஒரு தளமாகப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், 2008 மும்பை தாக் குதல், பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் ஆகிய வற்றில் தொடர்புடையவர்களை பாகிஸ்தான் நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

வெள்ளை மாளிகையைவிட்டுப் புறப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஆரத் தழுவி விடைகொடுத்தனுப்பும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். படம்: ஏஎஃப்பி