பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக மாணவர் கைது

கோவை: பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய குற்றச் சாட்டின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவரை கோவை போலிசார் கைது செய்துள்ளனர். 22 வயதான வினோத் என்ற அம்மாணவர் கோவை, சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் மாவட்ட அமைப்பாளராக உள்ள இவர், இரு தினங்களுக்கு முன்னர் கோவை அரசு கலை கல்லூரி முன், ‘புதிய மன்னவன்’ என்ற புத்தகத்தை விற்றுக் கொண்டிருந்தார். அப்புத்தகத்தில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் செய்தி இடம் பெற்றிருந்ததாகக் கூறப் படுகிறது.

மேலும் பிரதமர் குறித்து அவதூறு பரப்பும் கருத்துக்கள் இருந்ததாக வும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உள்ளூர் பாஜகவினர் போலிசில் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவர் வினோத் கைது செய்யப்பட்டார். அவதூறு கருத்துக்களைப் பரப்புதல் என்ற பிரிவின் கீழ், அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வினோத், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.