நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் தேர்தல் ஆணையருக்கு அழைப்பாணை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமன் நேரில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்காதது தொடர்பில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் முன்னிலையாகுமாறு முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமனுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றம் வரவில்லை. இதனால் திமுக சார்பில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் நான்கு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பதில் அளிக்க முன்னாள் தேர்தல் ஆணையருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உட்பட ஆறு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.