திருவள்ளூர்: மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றுவதாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆடியநல்லூர், ஆட்டந்தாங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் காலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். குறிப்பிட்ட அப்பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும் கடந்த 10 தினங்களாக ஆயுதம் ஏந்திய நபர்கள் சுற்றி வருவது எதற்கு என்பது தெரியவில்லை என்றும் இவர்களைப் போலிசார் ஒடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் நாள் முழுவதும் போலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.