சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேரும் பணத் துக்காகவோ, சொத்துக்காகவோ தம்முடன் அணி சேரவில்லை என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்கள் எடுக்கும் முடிவே தமது முடிவு என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். அதிமுகவின் 18 எம்எல்ஏக் களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட் டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர்நீதி மன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகி யோரைக் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கி யது. இதில் ஒருவர், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், மற்ற நீதிபதி அந்த உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்குப் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட தீர்ப்புக் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசும்போது தன் கருத்தை வெளிப்படுத்தினார் தினகரன்.
"முன்பு ஒருமுறை புதுவை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், தற்போது சபா நாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. "புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா?" என்று தினகரன் கேள்வி எழுப்பினார். தற்போது தங்கள் தரப்புக்கு 50 விழுக்காடு வெற்றி கிடைத் திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் நூறு விழுக்காடு வெற்றி கிடைக்கும் என்று நம் பிக்கை தெரிவித்தார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும், தகுதிநீக்கம் செய்யப்பட்டது சரி என்று தீர்ப்பு வந்தாலும்கூட அனைவரும் தம்மைவிட்டு எங் கும் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். "மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே எனது பதில். இந்தத் தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை," என்றார் தினகரன்.