இந்தியாவின் கேரள மாநிலம் ஏற்கெனவே வெள்ளத்தால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று பல பகுதிகளிலும் தொடர்ந்து பேய்மழை பெய்ததால் மீட்புப் பணிகள் பெரும் சங்கடங்களுக்கு உள்ளான தாகத் தெரிவிக்கப்பட்டது. பருவமழை காரணமாக அந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு நேற்று வரை 37 பேர் மாண்டுவிட் டனர். 60,622 பேர் 513 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
101 வீடுகள் முற்றாகச் சேதம் அடைந்துவிட்டன. 1,501 வீடுகள் இடிந்து போயிருக்கின்றன. இந்த நிலையில், சனிக்கிழமையன்று மழை சற்று தணிந்ததாகவும் அதன் காரண மாக இடுக்கி, இடமலையார் ஆகிய நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் கொஞ்சம் குறைந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது பெரும் பிரச்சினையாகிவிட் டது என்று அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் தாழ்வான பகுதிகளில் வசிப் போர் பீதி அடையவேண்டாம் என்று அரசாங் கம் அறிவித்து இருக்கிறது. சனிக்கிழமை முதல் புதிதாக உயிருடற் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று விமானம் மூலம் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டார். கொச்சியில் தளம் கொண்டிருக்கும் கேரளாவின் முதல்வர் விஜயனுடன் அவர் கலந்து விவாதித்தார். மீட்புப் பணிகளில் ராணுவமும் மெட்ராஸ் ரெஜிமண்ட் படைப் பிரிவும் கடற்படை, விமானப்படை வீரர்களும் தேசிய மீட்புப் பணி படையினரும் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கேரளாவின் வயநாட்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேசிய பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்த வீரர்கள் காப்பாற்றி வருகிறார்கள். படம்: இந்திய ஊடகம்