திருவள்ளூர்: அடுத்த மாதம் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளைச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
ஆனால், அண்மைக்காலமாக 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' போன்ற ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட, ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விடுவதால் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டுச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே விநாயகர் சிலைகள் தயாரிப்பவர்கள் பச்சை களிமண் அல்லது சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் ரசாயனம் கலக்காத பொருள்களால் மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயார் செய்ய வேண்டும்.
மேலும் தண்ணீரில் கரையக் கூடிய வர்ணங்களை மட்டுமே சிலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்தார்.