புதுடெல்லி: உன்னாவ் பாலியல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அப்பாலியல் சம்பவம் தொடர்பாக சிபிஐ நடத்தியுள்ள விசாரணை குறித்து அதன் இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை பாஜக நிர்வாகி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்கள், வழக்கறிஞருடன் சென்ற கார் மீது லாரி மோதியது.
இதில் அப்பெண்ணின் உறவினர்கள் இருவர் பலியாகினர். வழக்கறிஞரும் அப்பெண்ணும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்தும் சிபிஐ அமைப்பின் இயக்குநர் உரிய தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் உள்ளிட்ட பத்து பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் குல்தீப்பை கட்சியில் இருந்து நீக்குவதாக பாரதிய ஜனதா கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

