இந்தியாவின் சுதந்திர தினம்; உற்சாக கொண்டாட்டம்

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் இன்று  இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரமடைந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்ட திருநாளான சுதந்திர தினம், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களிலும் மக்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். மூவர்ணக்கொடியை ஏற்றியதுடன்,சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது 21 குண்டுகள் முழங்கின. வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பிரதமர் மோடி, தொடர்ந்து 6-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றிவைத்துள்ளார்.பின்னர் அவர் உரையாற்றி வருகிறார்.

முன்னதாக ராஜ்காட் சென்று தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

செய்தி: இந்திய ஊடகம்