ராய்ச்சூர்: வெள்ளத்தைக் கடந்து செல்ல ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் வெங்கடேஷை வீர தீர விருதுக்குப் பரிந்துறை செய்ய ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
அந்த கிராமத்தில் குளம் எது, குளத்தைக் கடக்க உதவும் தரைப்பாலம் எது என்று தெரியாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது 6 குழந்தைகளையும் ஒரு பெண்ணின் சடலத்தையும் தாங்கிக் கொண்டு அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்ல முற்பட்டது.
ஆனால், அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்குப் பாலம் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியாமல் தவித்தார்.
அப்போது அங்கே இருந்த நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், அந்த ஓட்டுநருக்கு வழிகாட்டினான்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், தன்னை பின்தொடர்ந்து வரும்படி மேம்பாலத்தில் ஓடும் வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு அச்சிறுவன் முன்னே சென்றான்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதால், வெங்கடேஷ் புகழும் பரவியது.
இதுபற்றி வெங்கடேஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அன்று நான் செய்தது வீரச் செயல் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உதவி செய்ய விரும்பினேன் செய்தேன், அவ்வளவுதான்," என்று விளையாட்டாகத் தெரிவித்தான்.

