வெடிபொருள், ஆயுதங்கள் நிரம்பிய லாரி சிக்கியது

ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இவர்கள், தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடலாம் என்றும் அது கூறியுள்ளது. மேலும் காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் அனைத்துலக  எல்லையில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் எல்லையில் உள்ள இந்திய ராணுவம் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் கத்துவா பகுதியில் மேற்கொள்ளப் பட்ட சோதனையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் நிரம்பிய லாரி சிக்கியது. 

இந்த லாரியில் உள்ள ஆயுதங்கள் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்திய அரசு ரத்து செய்த  ஆகஸ்டு 5ஆம் தேதிக்குப் பிறகு பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதிக்கு பிறகு இதுவரை சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள்.

எந்த நேரத்திலும பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

Loading...
Load next