புதுடெல்லி: குவைத் உட்பட வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு அளிக்கப் படுகிறது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குறிப்பாக குவைத் செல்லும் பெண்களுக்கு வெவ்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்ட பிறகே நிவாரணம் கிடைக்கிறது. இதுசம்பந்தமான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் எழுப்பினார். அதற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் நமது நாட்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதற்கான குடியுரிமை களையும் அரசு ஒழுங்குபடுத்தி இருக்கிறது என்று அவர் கூறினார்.
அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசால் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் திரு முரளிதரன் குறிப்பிட்டார்.