சென்னை: தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி என்றும், தமிழ்க் கலாசாரம் இல்லாமல் இந்தியக் கலாசாரம் முழுமை பெறாது என்றும் பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களை வெகுவாகப் புகழ்ந்தார்.
“சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலம் இது. தொன்மையான கோயில்களை அதிகம் கொண்டுள்ள பூமி தமிழகம். திருவள்ளுவர் அளித்த பெரும் இலக்கியப் படைப்பான திருக்குறள் ஒன்றே தமிழர்கள் தங்கள் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள போதுமானது,” என்றார் ஜெ. பி. நட்டா.
தமிழகத்துக்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை என்று பிரிவினை சக்திகள் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய பாஜக ஆட்சியில் 14வது நிதி ஆணையத்தின் வழி தமிழகத்துக்கு 5.50 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார். அதேசமயம் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 13வது நிதி ஆணையத்தின் மூலம் தமிழகத்துக்கு 94,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.