மும்பை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று நாக்பூரில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
“சமுதாயத்தில் அமைதியின்மைக்கான சூழ்நிலையை வேண்டுமென்றே உருவாக்க முயற்சி நடக்கிறது.
“டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய விதத்தைப் பார்த்தால், அது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது,” என்றார் முதல்வர் தாக்கரே.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
“ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டிசம்பர் 15ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறையினர் மீது கல் வீசப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பல்வேறு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு, தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் பலர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் நுழைந்து, மாணவர்களைத் தாக்கியது, துப்பாக்கிச் சூடு நடத்தியதை எல்லாம் பார்க்கையில் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
“இளம் தலைமுறையைத் தொந்தரவு செய்யும் எந்த நாடும் நிலைத்தன்மையுடன் இருக்க முடியாது. இந்தியாவின் இளைஞர்களைச் சீர்குலைக்க வேண்டாம் என்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது. இளைஞர்கள் வெடிகுண்டு போன்றவர்கள். அவர்களைத் தூண்டிவிடக் கூடாது எனப் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றுவரை அமைதி நிலவி வருகிறது,” என்றார் அவர்.