கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மனநிலை சரியில்லாத, ஆனால் யாருக்கும் தொல்லைதராத இளையர் ஒருவரை திருட்டு சம்பவத்தின் தொடர்பில் சந்தேகித்து அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சஜிமோன் என்பவர் கடந்த 11ஆம் தேதி தம்பானூர் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது இரண்டு கைபேசிகளும் அவர் வைத்திருந்த 40,000 ரொக்கப் பணமும் திருடப்பட்டது.
அது பற்றி பேருந்து நிலையத்துக்கு வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூறிய சஜிமோன், காதில் தோடு அணிந்த ஒருவர் தம்முடைய பொருள்களைத் திருடியிருக்கலாம் என்று கூறினார்.
திருடியவரைக் கண்டுபிடிக்க உதவினால் பணம் கொடுப்பதாகக் கூறிய சஜிமோனை விழிஞ்ஞம் முட்டக்காடு பகுதிக்கு சில ஆட்டோ ஓட்டுநர்கள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
விழிஞ்ஞம் முட்டக்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் எனும் இளையர் காதில் தோடு அணிந்திருப்பதை தம்பானூர் ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கடி பார்த்திருக்கிறார்கள். கடந்த ஈராண்டுகளாக மனநிலை சரியில்லாத நிலையிலிருந்த அஜீஸ் உடலில் சாயம் பூசிக்கொண்டு, காதில் தோடுடன் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தாயார் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார் அஜீஸ். ஆனால் அவருக்கு மனநலப் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அவரைத் தனியாக விட்டுவிட்டு அவரது தாயாரும் சகோதரியும் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
பசிக்கும் வேளைகளில் அஜீஸ் தம்பானூர் பகுதியில் யாசகம் பெற்று பசியைப்போக்கிக் கொள்வார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சஜிமோனுடன் சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் திருவல்லம் பகுதியில் இருந்த அஜீசை கண்டுபிடித்து அவரது வீட்டுக்கு அவரை ஆட்டோவில் தூக்கிச் சென்றதை அந்தப் பகுதி மக்கள் காணொளியாகப் பதிவு செய்தனர்.
அஜீசின் வீட்டுக்குள் அவரைக் கட்டிவைத்து, வெளியில் இருந்த மரத்திலிருந்து குச்சிகளைப் பிடுங்கி அவரைத் தாக்கியதாக போலிசார் தெரிவித்தனர்.
வெட்டுக்கத்தியை நெருப்பில் பழுக்கவைத்து அஜீசின் அந்தரங்க உடல் பாகங்கள், முகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சூடு வைத்து விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது.
தாக்குதலின்போது அஜீஸ் கத்திவிடக் கூடாது என்பதற்காக துணியை வைத்து அவரின் வாயை அடைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
காலை சுமார் 8 மணிக்கு அஜீஸை கட்டிவைத்து தாக்கத் தொடங்கிய அவர்கள், அவரிடம் சஜிமோனின் பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே பிற்பகல் 2 மணிக்கு மேல் அவரை விடுத்துள்ளனர்.
தாக்குதலில் மிக மோசமாகக் காயமடைந்த அஜீஸ், வீட்டில் இருந்தால் திரும்பிவந்து தாக்குவார்கள் என அஞ்சி அருகில் உள்ள வாழைத் தோப்பில் தஞ்சம் புகுந்தார்.
ரத்தக் காயங்களுடன் அஜீஸ் வாழைத் தோப்பில் இருந்தபோது தெரு நாய்கள் அவரைத் துரத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்தவர்கள் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். வாழைத் தோப்பில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சற்று நேரத்தில் அஜீஸ் உயிரிழந்தார்.
உள்ளூர்வாசிகள் எடுத்த காணொளியின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பணத்தைத் தொலைத்த சஜிமோன், ஆட்டோ ஓட்டுநர்கள் ஜினீஷ் வர்கீஸ், அருண், சாஜன், சஹாபுதீன் என்ற ஐவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
“எப்போதும் அமைதியாகவே இருக்கும் அஜீஸ் இதுவரை எந்தத் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டதில்லை,” என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity