சென்னை: தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை வழங்கப்பட வேண்டும், மற்ற மாநில ஊழியர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ேபாராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் வந்து குவியும் வெளிமாநில தொழிலாளர்களைத் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டமும் நடந்தது.
“திரும்பிப்போங்கள், திரும்பிப் போங்கள், வெளிமாநிலத்தவர்களே திரும்பிப்போங்கள், வராதீர்கள், வராதீர்கள் தமிழ்நாட்டுக்குள் வராதீர்கள்,’’ என்று மக்கள் தங்கள் கைகளில் பதாகைகளை வைத்துக்கொண்டு முழக்கமிட்டனர்.
பீகார், ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வேலைக்காக வருபவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.
தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகத்தான் தினந்தோறும் வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டுக்கு வந்துகுவிகிறார்கள். இங்கோ தமிழர்கள் வேலையின்றி அலைகிறார்கள்.
“தமிழகத்தில் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்பை முடித்து 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தமிழர்களின் அரசு வேலைவாய்ப்புகளைச் சூழ்ச்சி செய்து வட இந்தியர்கள் பறித்துக்கொள்கிறார்கள்.
“குறிப்பாக ரயில்வே போன்ற துறைகளில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. வருமானவரித்துறை அலுவலகம், வங்கிகளில் வட மாநிலத்தவரே அதிகமாக பணியில் இருக்கிறார்கள்.
“அன்றாட கூலித் தொழில்களிலும் வெளிமாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு அடியோடு பறிக்கப்படுகிறது. இந்த மண்ணின் மக்களுக்கு வாழ்வுரிமை வேண்டும்.
“தமிழர்கள் வெளிமாநிலங்களில் அரசு வேலைக்குச் செல்ல ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் எளிதாக வேலைக்கு வரலாம் என்றால் தமிழ் இளைஞர்கள் வேலைக்காக எங்கே போவார்கள்?
“மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் 90% வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் பணியமர்த்தப்படுகின்றனர்.
“அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்களை வெளியேற்றவேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கவேண்டும்,” என்று மணியரசன் கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் 90% வேலைகளை தமிழர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் என சமூக வலைத்தளமான டுவிட்டரில் கோரிக்கை எழுந்துள்ளது.