புதுடெல்லி: தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க இந்தியாவின் அண்டை நாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
“இல்லை எனில் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்திய ராணுவம் இனி முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்.
“பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அதற்கு காரணமாக இருக்கும் இடங்களில் முன் கூட்டியே தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. முன்கூட்டியே சில இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் முகுந்த் நரவனே.
சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், எல்லையில் போதுமான அளவில் படை வீரர்கள் குவிக்கப்படுவர் என்றார்.
சீன எல்லையில் எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்க படைகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் ஜெனரல் நரவனே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் நவ்சேரா செக்டார் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து, அங்கு ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.