தீவிரவாத இயக்கத்தின் மேற்பார்வையாளர் காஷ்மீரில் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதி

களுக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது ஜெய்ஷ் இ முகமதுவின் மேற்பார்வையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

யாசிர் என்ற அந்நபர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் நிகழ்ந்துள்ள பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளவர் எனத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 வீரர்களின் உயிரைக் கொன்ற ஜெய்ஷ் முகம்மது தீவிரவாதிகளை மேற்பார்வையிட்டது யாசிர்தான் என இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தீவிரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இந்திய ராணுவத்தினர், அவந்திபோரா என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் யாசிர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.  பாதுகாப்புப் படையில் மூவர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தினத்தன்று பெரிய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டிருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.