உசேன் போல்ட்டைவிட வேகமாக ஓடி சாதனை படைத்த கட்டுமான ஊழியர்

கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று கம்பலா ஓட்டப் பந்தயம். இதில் இரண்டு எருமைமாடுகளை வண்டி மாடுகளைப் போல கட்டிக்கொண்டு அவற்றுடன் சேர்ந்து சேறு நிறைந்த பகுதியில் ஓட வேண்டும்.

இது பாரம்பரிய போட்டியாக இருந்தாலும் உலக போட்டிகளை நெருங்கும் அளவிற்கு வீரர்களின் வேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

(கம்பலா பந்தயக் காணொளி: இணையம்)

அந்த வகையில் இந்த ஆண்டு கத்ரியில் இம்மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற கம்பலா பந்தயத்தில் கலந்துகொண்ட மங்களூரூவைச் சேர்ந்த சீனிவாச கவுடா என்ற இளைஞர், தமது எருமைமாடுகளுடன் சேர்ந்து ஓடி145 மீட்டர் துரத்தை 13.62 நொடிகளில் கடந்துள்ளார். அதன்படி, அவர் 100 மீட்டர் தொலைவை 9.55 நொடியில் கடந்ததாகக் கொள்ளலாம். 

ஒலிம்பிக்கில் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசேன் போல்ட் 100 மீட்டர் தொலைவை  9.58 நொடிகளில் கடந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த நிலையில், சீனிவாச கவுடா, நீர் நிறைந்த சேற்றில் ஓடி 9.55 நொடிகளுக்குள் பந்தயத்தில் வென்று சாதனை படைத்திருக்கிறார். 

இதுகுறித்து சீனிவாச கவுடா, '' மக்கள் என்னை உசேன் போல்ட் உடன் ஒப்பிட்டுp பேசுகிறார்கள். ஆனால் நான் நெல் வயலில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். 

தம்முடைய இந்தச் சாதனையில் தம்முடன் ஓடிய எருமைமாடுகளுக்கும் பங்குண்டு என்று கூறும் சீனவாச கவுடா, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கட்டுமான ஊழியராக இருக்கிறார்.

இளம் வயதில் கம்பலா பந்தயங்களைப் பார்த்து அதன் வயப்பட்ட அவர், கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு, பந்தயங்களில் கலந்துகொள்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற கம்பலா போட்டிகளில் சீனிவாச கவுடா 29  பரிசுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு