மேற்கு வங்கத்திற்கு ரூ.1,000 கோடி, ஒடிசாவிற்கு ரூ.500 கோடி நிதியுதவி

‘அம்பன்’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு கரையைக் கடந்த ‘அம்பன்’ புயலால் மேற்கு வங்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா கிருமித்தொற்றைக் காட்டிலும் ‘அம்பன்’ கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி பார்வையிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். புயலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நேற்றுக் காலை 11 மணியளவில் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவைச் சென்றடைந்த பிரதமர் மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக ‘அம்பன்’ புயல் அம்மாநிலத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரு மோடி, “நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மேற்கு வங்கத்திற்கு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கப்படும். புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள ஒரு மத்தியக் குழு அனுப்பப்படும். மறுவாழ்வு, மறுநிர்மாணம் தொடர்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இந்தத் துயரிலிருந்து மேற்கு வங்கம் மீள வேண்டும். இதுபோன்ற சோதனைக் காலங்களில் மேற்கு வங்கத்துடன் மத்திய அரசு துணை நிற்கும்,” என்றார்.

அத்துடன், புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்தார். அதன்பின் ஒடிசா மாநிலத்திற்கும் சென்ற அவர், அங்கும் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை வான்வழியாகப் பார்வையிட்டார். அதன்பின் ஒடிசாவிற்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.