'ஐக்கிய அரபு சிற்றரசுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி'

'ஐக்கிய அரபு சிற்றரசுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி'

2 mins read
14d4f6cd-1c5e-48e0-84c4-7c7bb7bc13d7
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சுமார் 12,000 ஊழியர்கள் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். படம்: ஊடகம் -

ஐக்கிய அரபு சிற்றரசுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை விமானங்கள் மூலம் அவர்களது நிறுவனங்கள் திருப்பி அனுப்பிவைக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.

ஆனால், அவ்வாறு தாயகம் திரும்புவோர் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். அதற்கான செலவை பயணிகளோ அல்லது அவர்களது வெளிநாட்டு நிறுவனங்களோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியானதாக 'கல்ஃப்நியூஸ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் சிக்கியிருப்போரை இந்தியாவுக்கு அழைத்து வரும் அரசாங்க திட்டமான 'வந்தே பாரத் மிஷனின்' இரண்டாவது கட்டம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாயில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப விரும்பினால், அதற்காக சிறப்பு விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு, இந்த அறிவிப்பு வகை செய்வதாக துபாயில் இருக்கும் இந்தியத் தூதர் விபுல் குறிப்பிட்டார்.

"இந்திய ஊழியர்களை அவர்களது தாயகத்துக்கு அனுப்ப பல நிறுவனங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அத்தகைய சில நிறுவனங்கள் எங்களை அணுகின," என்றார் அவர்.

ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் இந்த விவரத்தை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததைத் தொடரந்து, இந்திய அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சுமார் 12,000 ஊழியர்கள் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாறு அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான பயணச் செலவை பயணியோ அல்லது அவர்களது நிறுவனமோ ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய அரபு நாடுகளின் சட்டப்படி, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தாயகத்துக்குத் திரும்பும்போது அந்த பயணச் செலவுகளை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்புவதன் தொடர்பில் எங்களுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்கள், அவர்களது ஊழியர்களின் பயணச் செலவை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளன," என்றார் திரு விபுல்.

ஆனால், ஊழியர்கள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு ஆகும் செலவை அந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினர்.

கேரளா முஸ்லிம் கலாசார நிலையம் எனும் வெளிநாட்டு ஊழியர்கள் சமூக அமைப்பு 10 சிறப்பு விமானங்களை இயக்க கோரிய அனுமதியும் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக திரு விபுல் கூறினார்.

அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் அதிகமானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட திரு விபுல், அவர்களை கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்