உத்தரப் பிரதேசத்தில் கொவிட்-19 தொற்றுக்கு பலியான பெண் அமைச்சர்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கமல் ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாநில தொழில்நுட்ப கல்வித் துறைப் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.

58 வயதான அவருக்கு கடந்த மாதம் ஜூலை 17ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று அயோத்தி சென்று ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஆய்வு செய்ய இருந்தார். அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கான்பூரின் கடாம்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல் ராணி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நேற்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் 1,677 பேர் கொவிட்-19க்கு பலியாகினர்.