அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை நியூயார்க் டைம்ஸ் ஸ்குவேர் திரையில் காட்சிப்படுத்த ஏற்பாடு

அயோத்தியில் வரும் 5ஆம் தேதி புதன்கிழமை ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளதையொட்டி, அன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்குவேரில் ராமர், அயோத்தியில் அமைக்கப்படவுள்ள ராமர் கோயிலின் முப்பரிமாண வடிவமைப்பு, அடிக்கல் நாட்டு விழா காட்சிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அயோத்தியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் நேரத்தில் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை நியூயார்க்கில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக,  அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் செவானி கடந்த புதன்கிழமை கூறினார்.

இந்த நிகழ்வுக்காக 17,000 சதுர அடி பரப்பளவிலான எல்இடி திரையைக் கொண்ட நாஸ்டாக் திரை, உலகின் ஆகப் பெரிய, உயர் பிரிதிறன் கொண்ட வெளிப்புற எல்இடி திரையைக் கொண்ட டைம்ஸ் ஸ்குவேர் உள்ளிட்ட பல இடங்கள் காட்சிப்படுத்தலுக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என்றார் திரு செவானி.

ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுத்துகளும் ராமர் படங்கள், காணொளிகள், ஆலயத்தின் வடிவமைப்பு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி போன்றவை, பிரபலமான பல பெரிய திரைகளில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக ஆகஸ்ட் 5 அன்று இந்திய சமூகத்தினர் டைம்ஸ் ஸ்குவேரில் கூடுவதுடன் இனிப்புகளையும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.