அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த நிகழ்வில் பங்கேற்க 175 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த விழா தொடர்பான 3 நாள் பூஜைகள் நேற்று தொடங்கியுள்ள நிலையில், நாளைய முக்கிய நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சரயு நதிக்கரையில் விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், பூமி பூஜையின்போது கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில் பங்கேற்று அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுமார் 3 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது.

கொரோனா கிருமிப் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

இந்தியா, நேப்பாளத்தைச் சேர்ந்த 135 ஆன்மிகவாதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது

90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை என்பதால் சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் போன்றோர் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த பூமி பூஜைக்காக நாடு முழுவதிலுமிருந்து சுமார் 2,000  ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீர் ஆகியவை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

திருச்சி ஸ்ரீ ரங்கத்திலிருந்து வஸ்திரங்களும் காவிரி நீர், காவிரியாற்றங்கரை மண் போன்றவை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon