இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் வேகமடைந்து வருவதால் 50 வயதுக்கு மேற்பட்டோரைக் கவனிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 50 வயதைக் கடந்த சுமார் 260 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
தற்போது முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வரும் வாரங்களில் இந்த நடவடிக்கை வேகமடைய இருப்பதால் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அத்தகைய பணியாளர்கள் விரைந்து முன்வருமாறு நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி கே பால் கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பாற்றலை மக்களிடம் பரவலாக்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
“அந்த வகையில் ஐம்பது வயதைக் கடந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேறு வகையான நோய்த்தொற்றுடன் இருக்கும் இளையோரும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவர்,” என்றார் அவர்.