பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை பாழ்படுத்திவிட்டது. அதேபோன்று மேற்கு வங்க மாநிலத்தைச் சீரழிக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். மக்கள் நிச்சயம் பாஜகவை வெளியேற்றுவார்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணாமூல் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜக மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியை அகற்றிவிட்டு தங்கள் ஆட்சியை முதன்முதலாக நிறுவ திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிக் கட்சிகள் அமைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது இருந்தே தேர்தல் பரபரப்பு தொற்றிவிட்டது.
புருத்வான் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பங்கேற்றார்.
திரிணாமூல் காங்கிரசில் இருந்து வெளியான சிலர் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் மம்தா, வெளியேறியவர்கள் கட்சியின் நலன் குறித்து சிந்திக்காதவர்கள், அவர்கள் நம் கட்சியில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
இந்தியாவைச் சீரழித்துள்ளது பாஜக என்று சாடிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக வெளியேறுவதற்கான கதவை மக்கள் இந்தத் தேர்தலில் நிச்சயம் திறந்துவிடுவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
முர்ஷிதாபாத்தில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயிகளின் நிலத்தை பாஜக அபகரிக்க முயல்வதாகச் சாடினார்.