சமாதியே கதி; பூனையின் பாசப் போராட்டம்

சூரத்: உடன்பிறப்பு இறந்துபோன அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே முடங்கிப்போயுள்ள பூனையின் பாசப் பிணைப்பு காண்போர் நெஞ்சத்தைக் கலங்க வைப்பதாக உள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம், வல்சாட் நகரைச் சேர்ந்தவர் முன்னாவர் ஷேக். ரயில்வே ஊழியரான அவர், கடந்த நான்காண்டுகளாக லியோ, கோக்கோ என்ற இரு பூனைகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் கோக்கோ கடந்த 23ஆம் தேதி இறந்துவிட்டது. 

“கோக்கோவின் உடலை எங்களது குடியிருப்பு வளாகத்திலேயே புதைத்துவிட்டோம். அன்று முதல் கோக்கோ அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு லியோ செல்வதும் அங்கேயே பல மணி நேரமாக அமர்ந்திருப்பதும் எங்களுக்கு வியப்பை அளிக்கிறது,” என்றார் திரு ‌ஷேக்கின் மகன் ஃபைசல்.

கோக்கோ கறுமை நிறப் பூனை, லியோ வெள்ளை நிறத்தினாலானது.

இரண்டரை ஆண்டுகளுக்குமுன் திரு ஷேக்கின் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது கோக்கோ காணாமல் போய்விட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அது வல்சாட்டிலேயே இன்னொருவரின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து, காவல்துறையின் உதவியுடன் அங்கிருந்து கோக்கோவை மீட்டுக்கொண்டு வந்தனர் திரு ஷேக்கின் குடும்பத்தினர். ஆனால், அப்போது கோக்கோவின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

“ஈராண்டு இடைவெளிக்குப் பிறகும், உடன்பிறந்த இரு பூனைகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொண்டன. இரண்டும் இணைந்து அதிக நேரம் விளையாடின. ஆனாலும், உடல்நலக்குறைவால் கோக்கோ அண்மையில் இறந்துவிட்டது. கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முயன்றும் அதனைக் காப்பாற்ற இயலவில்லை,” என்றார் ஃபைசல்.

cat2.jpg

Property field_caption_text
  • கறுமை நிற 'கோக்கோ'வும் வெண்ணிற 'லியோ'வும் பாரசீக இனத்தைச் சேர்ந்தவை. படம்: இணையம்

அதனைத் தொடர்ந்து, கோக்கோவின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து, அதைத் தங்களது வீட்டு வளாகத்திலேயே அவர்கள் புதைத்துவிட்டனர்.

“கோக்கோ இறந்ததும் புதைக்கப்பட்டதும் லியோவிற்குத் தெரியாது. ஆனால், ஏதோ தவறு நடந்துள்ளதை உணர்ந்த லியோ, சில மணி நேரத்திற்குப் பிறகு கோக்கோவின் சமாதிக்கு அருகே சென்று அமர்ந்துவிட்டது,” என்று ஃபைசல் விவரித்தார்.

கோக்கோவின் சமாதிக்கு அருகே லியோ அமர்ந்துள்ள காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து, பலரும் அக்காட்சியைக் காண திரு ஷேக்கின் குடியிருப்பிற்கு வந்துசெல்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!