எச்சில் துப்ப ‘பணிக்கம்’; இந்திய ரயில்வே அறிமுகம்

எச்சில் கறைகளை அகற்ற ஆண்டுதோறும் ரூ.1,200 கோடி செலவு

நாக்பூர்: கிராமங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் சிலவற்றில் பஞ்சாயத்துக் காட்சிகளின்போது, வெற்றிலையைப் போட்டுக் குதப்பியபடி இருக்கும் நாட்டாமை, எச்சிலைக் கீழே உமிழாமல் பணிக்கத்தில் (செம்பு போன்ற பாத்திரம்) துப்புவார்.


தமிழகத்தில் அப்பழக்கம் இருந்தாலும் மற்ற இந்திய மாநிலங்களில், குறிப்பாக வடமாநிலங்களில் பான், குட்கா போன்றவற்றை மென்று, கண்ட இடங்களில் துப்புவதை எல்லா இடங்களிலும் காணலாம்.


இப்படி பான், குட்கா போன்றவற்றை மென்று, எச்சில் துப்புவதால் ஏற்படும் கறைகளைப் போக்க இந்திய ரயில்வே ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1,200 கோடி ரூபாயையும் ஏராளமான தண்ணீரையும் செலவிட்டு வருகிறது.


இந்நிலையில், ரயில் நிலைய வளாகங்களில் பயணிகள் எச்சில் துப்புவதை ஊக்குவிக்காமல் இருக்க, சிலமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியக்கூடிய பணிக்கங்களைத் தானியக்க விற்பனை இயந்திரங்கள் மூலம் விற்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.


இதற்கான ஒப்பந்தம், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரை மையமாகக் கொண்ட ‘ஈஸி ஸ்பிட்’ எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக மேற்கு, வடக்கு, மத்திய ரயில்வே மண்டலங்களில் அந்த இயந்திரங்கள் நிறுவப்படும்.


ரூ.5 முதல் ரூ.10 விலையில் அந்தப் பணிக்கம் விற்கப்படும்.


பெருமூலக்கூறு காகிதக்கூழ் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் அந்தப் பணிக்கம், எச்சிலில் இருக்கும் கிருமிகளை வெளியேறாமல் தடுத்துக்கொள்ளும்.


எளிதில் மட்கும் வகையிலான அந்தப் பணிக்கம், பை, குவளை, தொட்டி என வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைக்கும். அதனை 15 முதல் 20 முறை பயன்படுத்தலாம். அதில் விதைகளும் எச்சிலை உறிஞ்சி, திடப்பொருளாக மாறக்கூடிய பொருளும் இருக்கும்.


பயன்படுத்தியபின் அந்தப் பையைச் சேற்றிலோ மண்ணிலோ போட்டுவிட்டால், அதிலிருக்கும் விதை ஒரு தாவரமாக வளர்ந்துவிடும்.


இப்போது, ரயில்வே வளாகங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 வரை தண்டம் வசூலிக்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!