புதுடெல்லி: இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள் கிழக்கு லடாக் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டன.
இதுகுறித்து சீனா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தியா தனது போர்த்திறன்களை சீனாவுக்கு மறைமுகமாக உணர்த்தும் நடவடிக்கை இது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனா, இந்தியா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக இதுவரை 13 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருதரப்பும் எல்லையில் சுமார் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய எல்லைக்குள் சீனா தொடர்ந்து ஊடுருவ முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி வரும் இந்தியா, அண்மையில் எல்லையில் போர்ப்பயிற்சி மேற்கொண்டதை அடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனா அண்மையில் இயற்றி உள்ள புதிய பாதுகாப்புச் சட்டம் குறித்து இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
"லடாக் வான்வெளியில் நமது ராணுவம் ஒருங்கிணைந்த போர்ப் பயிற்சி, இயந்திரமயமாக்கப்பட்ட போர் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் விமானப்பயிற்சியும் ஒன்று. கடந்த காலங்களிலும் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று ராணுவ அதிகாரி ஒருவர் அறிவித்ததாக தினத்தந்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.