மும்பை: பண மோசடி வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மாநகரில் உள்ள மது விடுதிகள், மதுக்கூடங்கள், உணவகங்களில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் லஞ்சத்தொகை வசூலித்துத் தரவேண்டும் என்று காவல்துறையினரை அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அவர் பதவி விலகினார்.
இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ஐந்து முறை நோட்டீஸ் அனுப்பியும் அனில் தேஷ்முக் ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார் அனில் தேஷ்முக்.
அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் நள்ளிரவில் அவரைக் கைது செய்ததாக அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உள்ளதாக வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதற்கட்டமாக மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.