திருச்சூர்: திருமணமான மறுநாளே புதுமணப்பெண் தம் காதலியுடன் ஓடிப்போன சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூரில் நிகழ்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர்க்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகிப் போயிற்று.
ஆறு நாள்கள் விசாரணைக்குப் பிறகு, மதுரையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 23 வயதான அப்பெண்ணும் அவரின் காதலியும் காவல்துறையிடம் பிடிபட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பின்னர் அப்பெண் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி தெரிவித்தது.
காதலியுடன் ஓடிப்போவது தொடர்பில் திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டதாகவும் ஆயினும் நகைகளுக்காகத் திருமண நாள்வரை காத்திருந்ததாகவும் அப்பெண் கூறினார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி அப்பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. மறுநாள் வங்கியில் ஒரு வேலைக்காக புதுமணத் தம்பதியர் இருவரும் சென்றனர்.
அப்போது, தன் தோழியைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகக் கூறி, இருசக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றார் அப்பெண்.
மனைவிக்காக மாலை 5 மணிவரை வங்கியில் காத்திருந்த கணவர், சொன்னபடி அவர் வராமல் போகவே காவல்துறையில் புகார் அளித்தார்.
கோட்டயம், சென்னை, மதுரை, திருச்சூர், எர்ணாகுளம், திரும்பவும் மதுரை என்று பல ஊர்கள் சுற்றியபின், அப்பெண்கள் மதுரையில் சிக்கினர்.
மதுரையில் ஏதேனும் துணிக்கடையில் வேலைசெய்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட அவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இதில் வியப்பு என்னவெனில், உடன் ஓடிவந்த காதலியும் அண்மையில் திருமணமானவராம். அவரும் தம் பெற்றோர் போடும் நகைகளுக்காகத் திருமணமாகும்வரை காத்திருந்து, அதன்பின் திட்டமிட்டபடி வீட்டைவிட்டுத் தலைமறைவானார்.