அயோத்தி: தீபாவளித் திருநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கிய ஐந்து நாள் ‘தீப உற்சவ’ விழாவால் களைகட்டி வருகிறது ராமபிரான் பிறந்த இடமான அயோத்தி. ஐந்தாவது ஆண்டாக இவ்விழா அங்கு இடம்பெறுகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ‘ராமர் பாதம்’ பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு, மனங்களைக் கொள்ளைகொண்ட ‘லேசர்’ காட்சி இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானோர் அதனைக் கண்டுகளித்தனர்.
தீபாவளியை ஒட்டி, இன்று புதன்கிழமை 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படவுள்ளன. இது புதிய கின்னஸ் சாதனையாக அமையும்.
அவற்றில் 900,000 அகல் விளக்குகள் சராயு நதிக்கரையை அலங்கரிக்கும். எஞ்சிய 300,000 விளக்குகள் இன்று மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிவரை அயோத்தி நகரின் பல பகுதிகளில் ஏற்றப்படும்.
12,000 தொண்டூழியர்கள் அகல் விளக்கு ஏற்றும் பணிகளை மேற்கொள்வர்.
கடந்த ஆண்டு தீப உற்சவ விழாவின்போது 600,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டது.