புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி 10 விழுக்காடாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், "இந்தியாவில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி குறைந்தபட்சம் 10 விழுக்காடாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்த வளர்ச்சி 9.5% அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று சிலர் கூறுவது தவறானது.
"அனைத்துல பண நிதியம் 2021ல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. அந்த அமைப்பின் கூற்றுப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வேகமான பொருளியல் நாடாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறைவான மதிப்பீடாகும்.
"நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாகவே இருக்கும். 2022-23ல் தொடங்கி வரும் ஆண்டுகளில் இந்த வளா்ச்சி 8 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வளர்ச்சி 5%-6.5% என கூறுவது தவறு," என்றாா் அவா்.