புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) ராம் சந்தர் ஜங்ரா நேற்று முன்தினம் போராட்டப் பகுதியைக் கடந்து செல்ல முயன்றபோது கறுப்புக்கொடி ஏந்திய போராட்டக்காரர்கள் அவரது காரை வழிமறித்தனர்.
காரையும் தம்மையும் அவர்கள் தாக்கியதாக ஜங்ரா தெரிவித்தார்.
ஆனால், 'பாஜக குண்டர்கள்' தங்களைத் தாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயி குல்தீப் ராணா படுகாயமடைந்து ஹிசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாய தலைவர் ரவி ஆசாத் தெரிவித்தார்.
ஜங்ரா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி, நார்னவுண்ட் காவல் நிலையத்தில் விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் பல பாஜக தலைவர்களை ரோஹ்தக்கின் கிலோய் கிராமத்தில் உள்ள கோவிலில் அடைத்து வைத்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் புனித தலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றதை நேரலையில் காண பா.ஜ.க தலைவர்கள் அந்த கிராமத்தில் கூடி இருந்தனர்.
மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் அவர்களை விட மறுத்தனர்.
கோவிலைச் சுற்றி முற்றுகையிட்டு, விவசாயிகள் தங்களது டிராக்டர்களை கோவிலுக்கு செல்லும் தெருக்களில் நிறுத்தி வைத்தனர். பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகு ஏழு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சில தலைவர்கள் தாங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என மறுத்துள்ளனர்.