புதுடெல்லி: தமிழகம், கேரளம், கா்நாடகம், உத்தரப் பிரதேசம் உள்பட நாட்டின் 12 மாநிலங்களில் டெங்கி கிருமித்தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 1.17 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 200க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபா் மாதத்தில்தான் அதிக எண்ணிக்கையில் டெங்கி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பருவ மழையே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டெங்கி காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை, குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன.
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 21,954 பேரும் அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 16,910 பேரும் ராஜஸ்தானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் டெங்கியால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிஸா, குஜராத், கேரளம், கா்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 3,806 போ் டெங்கி காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
இதனிடையே, கொரோனா கிருமித்தொற்றுக்கும் டெங்கி தொற்றுக்கும் ஏறத்தாழ ஒரேமாதிரியான அறிகுறிகள் காணப்படுவதால் அதனை அடையாளம் கண்டு சிகிச்சையளிப்பதில் சிரமம் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறின.