திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் வரும் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் கூறுவதே இம்மண்டலக் குழுக்களின் நோக்கமாக இருக்கிறது.
திருப்பதி கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் கலந்துகொள்வர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களுக்கு இடையே சுமுக உறவை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள இந்தியாவில் மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தக் குழுவில் தமிழ்நாடு சார்பாக உறுப்பினராக உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது கூடுதல் உறுப்பினர்களாக உள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, திருப்பதி கூட்டம் கொரோனா போன்ற பிரச்சினை களுக்கு இடையில் நடப்பதால் அதன் முக்கியத்துவம் அதிகரித்து உள்ளதாகவும் கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.