லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறையில் ஏற்பட்ட மோதலின்போது கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அச்சமயம் முப்பதுக்கும் அதிகமான போலிசார், கைதிகளின் கல் வீச்சில் காயமடைந்தனர்.
ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அண்மையில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.
இதற்குப் போலிசாரின் அலட்சியம்தான் காரணம் என்றும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மற்ற கைதிகள் சாடி உள்ளனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் சிறைக்காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
போலிசார் நடத்திய பதில் தாக்குதலின்போது மற்றொரு கைதி இறந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் உடல்நலம் குன்றியதால் அவர் இறந்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.