அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் இந்திய மீனவர் ஒருவர் பாகிஸ்தான் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடந்த மாத இறுதியில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கடந்த சனிக்கிழமை மாலை ஜக்காவ் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு சுற்றுக்காவல் படகில் பாகிஸ்தான் கடற்படையினர் அங்கு வந்தனர்.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டிய கடற்படையினர், திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கியதாகத் தெரிகிறது.
இதனால் பதறிப்போன மீனவர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பியதுடன், கரையை நோக்கி படகைச் செலுத்தினர். ஆனால் அவர்களை விடாமல் துரத்திய பாகிஸ்தான் கடற்படையினர், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் குண்டு பாய்ந்து இறந்தார். அவரது பெயர் ஸ்ரீதர் ரமேஷ். 32 வயதான அவருக்கு ஆறு, எட்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும் ஒரு மீனவர் காயம் அடைந்துள்ளார். இந்திய, பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதிகளில் இருநாட்டு மீனவர்களும் அவ்வப்போது எல்லையைக் கடந்து மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாவது வழக்கம்தான். எனினும் இவ்வாறு படகை துரத்திச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது இந்திய மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு படகுகளில் வந்த அடையாளம் தெரியாத பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் பத்துப் பேர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போர்பந்தர் பகுதி போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் கடற்படை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்திய மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன்பிடிப்பதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக திரும்பிச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைப் பொருட்படுத்தாத மீனவர்கள் தொடர்ந்து முன்னேறிச் சென்றதாகவும் அதனால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களிடம் இந்திய கடற்படை உறுதி அளித்துள்ளது.