கான்பூர்: இந்தியாவில் ஸிக்கா கிருமிப் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு நூற்றுக்கும் அதிகமானோருக்கு ஸிக்கா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கான்பூர் நகரில் 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 17 பேர் சிறார்கள் என்றும் கான்பூர் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தொற்றுப்பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கான்பூர் நகர தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் நேபால் சிங் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உள்ளார். அவரது உடல்நலம் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொழில் நகரமாக விளங்கும் கான்பூரில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதிதான் ஸிக்கா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, தொற்றுப் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.