மங்களூரு: கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த ஆரஞ்சுப் பழ வணிகரான ஹரேகலா ஹஜப்பா, இந்தியாவின் இரண்டாவது பெரிய குடிமைசார் விருதான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
கிராமப்புறக் கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
66 வயதான திரு ஹஜப்பா, மங்களூரு மாவட்டத்தில் உள்ள ஹரேகலா - நியூபட்பு எனும் சிற்றூரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டி, பல நூறு பிள்ளைகளைப் படிக்க வைத்துள்ளார்.
அதிபர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் திரு ஹஜப்பாவிற்கு அவ்விருதை வழங்கினார்.
மங்களூரு பேருந்து நிலையத்தில் 1977 முதல் ஆரஞ்சுப் பழம் விற்றுவரும் இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இவர் பள்ளிக்கே சென்றதில்லையாம்.
இந்நிலையில், 1978ஆம் ஆண்டில் வெளிநாட்டவர் ஒருவர் இவரிடம், “ஆரஞ்சுப் பழம் என்ன விலை?” என்று கேட்டுள்ளார்.
கன்னடம் தவிர்த்து வேறு எந்த மொழியும் தெரியாது என்பதால் திரு ஹஜப்பாவால் பதில் சொல்லத் தெரியவில்லை.
“என்னால் அவருக்குப் பதில் கூற முடியாததை அசிங்கமாக உணர்ந்தேன். அதனால், எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது என முடிவுசெய்தேன்,” என்றார் திரு ஹஜப்பா.
ஆனாலும், பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்ற இவரது ஆசை இருபது ஆண்டுகளுக்குப் பிறகே நனவானது.
2000ஆம் ஆண்டில் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி கிடைத்தது. முதலில் 28 பிள்ளைகளுடன் அப்பள்ளி தொடங்கப்பட்டது.
இப்போது, அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை 175 பிள்ளைகள் படித்து வருகின்றனர்.
‘எழுத்துப் புனிதர்’ உள்ளிட்ட பல விருதுகளால் சிறப்பிக்கப்பட்டுள்ள இவர், தமக்குக் கிடைத்த பரிசுப் பணத்தை எல்லாம் கொண்டு தமது ஊரில் மேலும் பல பள்ளிகளைக் கட்ட விரும்புகிறார்.
“எங்கள் ஊரில் இன்னும் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். பள்ளிகள், கல்லூரிகள் கட்ட நிலம் வாங்க நன்கொடை அளித்துள்ளனர். அதற்காக, எனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தையும் சேர்த்து வைத்துள்ளேன்,” என்றார் திரு ஹஜப்பா.
தமது ஊரிலேயே 11, 12ஆம் வகுப்பு பயிலும் விதமாக ஒரு தொடக்கக் கல்லூரி கட்டித் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.